×

மாநகராட்சி பள்ளி மாணவிகள் 2 பேர் காய்ச்சல் காரணமாக வாந்தி மயக்கம்

கோவை, செப்.21: கோவை ராமநாதபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளியில்  பள்ளிக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இது குறித்து பள்ளி ஆசிரியைகள் சுகாதார துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பள்ளியில் ஆய்வு செய்தனர். இதில் 12 மாணவிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி சுகாதார அலுவலர் ஒருவர் கூறியதாவது: வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகள் இருவரும் வீட்டில் இருந்து வந்தபோதே காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் பள்ளி வந்ததும் வாந்தி எடுத்து உள்ளனர். உடனடியாக பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 8-ம் வகுப்பு மாணவிகள் 9 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கும் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சாதாரண ப்ளு காய்ச்சல்தான் இது. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. காய்ச்சல் இருந்தால் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாநகரில் ப்ளூ காய்ச்சல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளோம்.

ஒரே இடத்தில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அந்த இடம் ஹாட் ஸ்பாட் என அறிவிக்கப்படும். ஆனால் கோவையில் அதுபோன்ற நிலை இல்லை. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். வாந்தி பாதிப்பு ஏற்பட்ட மாணவிகளும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்