கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச்சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

கொடைக்கானல் செப். 21:கொடைக்கானல்- வத்தலக்குண்டு செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு மற்றும் வேறு மாவட்டங்களுக்கும் செல்லும் பிரதான சாலை மழைக்காலங்களில் மிகுந்த  சேதமடைந்தது. இதன் காரணமாக சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். சாலையின் குறுக்கே அதிகமான மழை நீர் குறுக்கிடுவதால் சாலைகள் சேதம் அடைவதை அறிந்த நெடுஞ்சாலை துறையினர் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளின் குறுக்கே மண்அரிப்பை தடுக்கும் விதமாக பாலங்கள் அமைக்கும் பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டுவந்தனர். கடந்த ஒரு மாதமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததன் காரணமாக பாலம் அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது. தற்போது மழை குறைந்துள்ளதாலும் பாலப் பணிகளும் நிறைவுற்றதாலும் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானலில் இருந்து 18 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மச்சூர் பகுதியில் இருந்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறைக்கு கட்டுப்பட்ட சாலை வரை தார் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது அமைக்கப்படும் சாலைகள் மிகவும் உறுதியாக இருக்கும் என கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: