மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: விசைத்தறி சங்க கூட்டமைப்பினர் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்

ஈரோடு, செப். 21:  விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, தலைமை செயலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், கந்தவேல் உள்பட நிர்வாகிகள், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்து கூறுகையில்,‘‘தமிழகத்தில் 1.41 லட்சம் மின் இணைப்புகள் மூலமாக 6 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன.

இதன்மூலமாக, நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 கோடி பேர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். அரசின் இலவச மின்சாரத்தை 500 யூனிட்டில் இருந்து 750 யூனிட்டாக மாற்றிய நிலையில், அதை 1,000 யூனிட்டாக உயர்த்த கோரி வருகிறோம். இச்சூழலில் மின் கட்டண உயர்வு, விசைத்தறி தொழிலை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே, நூல் விலை உயர்வு, நெசவு செய்த துணிக்கு போதிய விலையின்மை, மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் என பல்வேறு காரணங்களால் ஜவுளி சார்ந்த தொழில்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

எனவே, இத்தொழிலையும், இதை நம்பி உள்ள நெசவாளர்கள், மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் ஜவுளி சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, கோரிக்கை குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்ததாக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Related Stories: