×

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் பதிவு சீட்டி கவுண்டர்கள் திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், கீழம்பி, ராஜகுளம், முத்தியால்பேட்டை, வையாவூர், களியனூர், அப்துல்லாபுரம், ஐய்யங்கார்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக  வழக்குத்திற்கு மாறாக, தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கும், பிற உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இதற்காக சிகிச்சை பெறக்கூடியவர்கள் மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பதிவு சீட்டினை பெற்ற பிறகே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் நேற்று காலை முதலே வருகை தந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவனையின் வளாகத்தில் அமைந்துள்ள கவுண்டரில் உள் மற்றும் புறநோயாளிகள் பதிவு சீட்டு பெறுவதற்காக காத்திருந்தனர். இதுகுறித்து, நோயாளிகள் கூறுகையில், ‘அரசு மருத்துவமனையில் பதிவு சீட்டு பெறுவதற்காக 1 முதல் 2 மணி நேரத்திற்கும்  மேலாக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

சிகிச்சை பெற வரும் நோயாளிகள் காத்திருப்பதால் சோர்வு ஏற்படுகிறது. பகல் 1 மணி வரை மட்டுமே மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் நிலையில் பதிவு சீட்டு பெறுவதற்கு தாமதம் ஆவதால் மறுநாள் வந்து டாக்டரை பார்க்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, நோயாளிகளின் துயர் தீர்க்கும் வகையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பதிவு செய்வதற்கு கூடுதல் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kancheepuram ,Govt Hospital ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...