ஆரோவில்லில் இருந்து 4 தொன்மையான சிலைகள் மீட்பு

கும்பகோணம், செப்.20: ஆரோவில்லில் இருந்து 4 தொன்மையான சிலைகள் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைப்பற்றினர். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அமைந்துள்ள மரோமா நிறுவனத்தில் பழமையான உலோக சிலைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மேற்படி விற்பனை நிலையத்தை சோதனை செய்ய வேண்டி கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் விண்ணப்பித்து முறையான உத்தரவு பெறப்பட்டது.

இதையடுத்து, சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவுப்படி, ஐஜி தினகரன் வழிகாட்டுதலின் படி, எஸ்.பி ரவி மேற்பார்வையில், திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஎஸ்பி கதிரவன் தலைமையில், இன்ஸ்பெக்டர் இந்திரா, எஸ்.ஐ தண்டாயுதபாணி, எஸ்எஸ்ஐ மதிக்குமார், முதல்நிலை காவலர்கள் ரவிக்குமார், கும்பராஜா, பிரசன்னா மற்றும் லெவின் ஆகியோர் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, நேற்று அந்த நிறுவனத்தில் சிறப்பு தனிப்படையினர் சோதனை செய்தனர். இதில், பார்ப்பதற்குத் தொன்மையாக காட்சியளித்த சுமார் 78 சென்டி மீட்டர் உயரம் கொண்ட சிவகாமி அம்மன் உலோக சிலை, சுமார் 45 சென்டி மீட்டர் உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கற்சிலை,

சுமார் 30 சென்டி மீட்டர் உயரம் கொண்ட நாக தேவதை கற்சிலை மற்றும் சுமார் 38 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இடது பக்கம் உடைந்த நிலையில் மார்பளவுக்கு மேல் உள்ள சிவன் கற்சிலை உள்ளிட்ட 4 சிலைகள் மேல்நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்டுள்ளது. இச்ந்த சிலைகள் சம்பந்தமாக உரிமையாளரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இது தொடர்பாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது. இந்த சிலைகளின் தொன்மைத் தன்மை குறித்தும், இவைகள் தமிழகத்தின் ஏதேனும் ஒருகோவிலுக்கு சொந்தமானதா? என்பது பற்றியும் புலன் விசாரணை நடந்துவருகிறது.

Related Stories: