நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்

திருத்தணி, செப்.20: திருத்தணி ஆறுமுகசுவாமி கோயில் பகுதியில் திருத்தணி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 2000க்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருத்தணி நகரை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்துநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, கூடுதல் மருத்துவர் நியமிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருத்தணி அரசு பொது மருத்துவமனை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் முதியவர்கள் அதிக அளவில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்களில் காயம் அடையும் பலர், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். தமிழக அரசு, ஏற்கனவே இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயலாற்றி வருகிறது.

அந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அனைத்து கிராமங்களிலும் சர்க்கரை, ரத்த கொதிப்பு மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டால் அரசு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

நோயாளிகளுக்கு அலைச்சலும் குறையும். எனவே இவ்விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து கிராமங்களுக்கும் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை கொண்டு செல்லவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் நோயாளிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: