×

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்

காஞ்சிபுரம், செப். 20: காஞ்சிபுரத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 260 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 15 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ₹41,200 மதிப்பிலான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள்  மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கொடி நாள் நிதியாக ₹5,61,000 காசோலையினை மாவட்ட கலெக்டரிடம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேதபுரி வழங்கினார். மேலும், வக்காளர் பட்டியலை 100 சதவீதம் துய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டு 90 சதவீதம் மேல் பணி முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Aarti ,
× RELATED ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை...