150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி, செப். 20: நந்திவரத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியில் வளர்ந்த சீமை கருவலே மரங்களை அகற்ற சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நந்திவரத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இதில், 2 கிலோ மீட்டர் கொண்ட ஏரிக்கரை முழுவதும் வேலிக்காத்தான் என அழைக்கப்படும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதில், தண்ணீரை உறிஞ்சக்கூடிய அதிசக்திவாய்ந்த சீமை கருவேலமரங்கள் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் வளர்க்கக்கூடாது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம் உத்தரவை மதிக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இதுபோன்று மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

இதனால், ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதில், தண்ணீரின்றி விவசாயிகள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எளிதாக செல்ல வேண்டும் என்பதற்காக ஏரிக்கரையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் பல்வேறு கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஏரிக்கரையில் சென்று வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘காட்டூர், பெரிய அருங்கால், சின்ன அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம், அம்மணம்பாக்கம், குமிழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு நந்திவரம் ஏரிக்கரை வழியாக எளிதில் காலங்காலமாக சென்று வருகின்றோம்.

இதில், தற்போது ஏரிக்கரை முழுவதும் வேலிகாத்தான் என அழைக்கப்படும் சீமைக்கருவேல மரங்கள் முட்புதர்களாக அடர்ந்து காணப்படுகிறது. இதில், இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்று வருபவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அனைவரது முகத்திலும் வேலிக்காத்தான் முட்கள் குத்தி கிழிப்பதால் பலர் படுகாயமடைந்து செல்கின்றனர். இதனால், பல்வேறு கிராமங்களில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு எளிதாக செல்ல முடியாமல் காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி வர வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் நந்திவரம் ஏரிக்கரையை சீரமைக்க 2017- 18ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. பணிகளும் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த பணிகள் இது வரை சரி வர செய்யப்படவில்லை. இதில், ஏரிக்கரை முழுவதும் ஆங்காங்கு வெடிப்புகள் விட்டு காணப்படுகிறது.

தற்போது, வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் மேற்படி ஏரிக்கரை பலம் இழந்து  உடையும் அபாய நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏரியில் உள்ள தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டும் வேலிகாத்தான் என்று அழைக்கப்படும் சீமைக் கருவேல மரங்களை பொதுபணித்துறையினர் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு ஏரிக்கரையை சீரமைக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுத்துகின்றனர்.

Related Stories: