பாலியல் தொழில் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் திமுக வார்டு உறுப்பினர் வெட்டி கொலை

சென்னை, செப். 20: பாலியல் தொழில் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால், திமுக வார்டு உறுப்பினரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததுள்ளது. தாம்பரம் அருகே, சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சி, எட்டயபுரம் கிராமம், எட்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (31). திமுக வார்டு செயலாளர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நடுவீரப்பட்டு ஊராட்சி 3வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று பதவி வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் அதே தெருவில் உள்ள லோகேஷ்வரி என்பவரின் வீட்டு வாசலில் சதிஷ் தலை மற்றும் உடம்பு பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யபட்டு கிடந்துள்ளார்.

 இதனை கண்ட அப்பகுதி மக்கள் சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் சதிஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், சதிஷ் வீட்டின் அருகில் வசித்து வருபவர் எஸ்தர் (எ) லோகேஸ்வரி (30), பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனால், அப்பகுதி இளைஞர்கள் காலை முதலே குடிபோதைக்கு அடிமையாவதால் சதீஷ், சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனால், இருவருக்கும் கடந்த பல மாதங்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எஸ்தர், சதீஷை தன் வீட்டிற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் சமாதானமாகாத சதீஷ் கோபமாக வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் சதீஷை வீட்டிற்கு லோகேஸ்வரி வரவழைத்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே இருந்த அடியாட்களை கொண்டு சதீஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து சடலத்தை வீட்டின் வாசலில் வீசிவிட்டு தப்பி சென்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள லோகேஷ்வரி மற்றும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

லோகேஷ்வரி கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்து வருவதாக சோமங்கலம் காவல் நிலையத்திற்கு சதீஷ் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து லோகேஷ்வரியை போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது, நீ மதுபாட்டில் விற்பனை செய்வதை சதீஷ் தான் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து வந்தார். அவரிடம் பேசி சமாதானமாக சென்றால்தான் நீ மதுபானம் விற்க முடியும் என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது சதீஷ் கொலை செய்யபட்டுள்ளார் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: