திருவொற்றியூர் அரசு கல்லூரியில் கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

திருவொற்றியூர், செப்.20: திருவொற்றியூர் பூந்தோட்ட  தெருவில் உள்ள சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் (உறுப்பு) கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாட்டியல், வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாட்டியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 1000  மாணவ, மாணவியர் இங்கு படித்து வருகின்றனர். கல்லூரி முதல்வர், மற்றும் 23 பேராசிரியர்கள் 4 தற்கால அலுவலர்கள் என சுமார் 30 பேர் கல்லூரியில் பணியாற்றுகின்றனர். இந்த கல்லூரியில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பேராசிரியர்கள் இல்லை. இதனால் 35 மாணவ, மாணவியருக்கு ஒரு பேராசிரியர் என்ற நிலை மாறி, தற்போது 70 பேருக்கு ஒரு பேராசிரியர் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், ஒரு பேரசிரியர் 3 பாடப்பிரிவுகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பேராசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதுடன், மாணவ, மாணவியரும் முழுமையான கல்வி பயிற்சியை பெற முடியவில்லை. எனவே, இங்கு கூடுதலாக பேராசிரியர்களையும், அலுவலக உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ, மாணவியர்களும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த அரசு கல்லூரியில் மாணவ, மாணவர்களை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயங்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த போதுமான பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் கல்வி தரம் குறைகிறது. ஏற்கனவே இந்த கல்லூரியில் இட வசதி இல்லாமல் நெருக்கடியில் சிரமத்துடன் படித்துக் கொண்டிருக்கும் சூழலில்,  பேராசிரியர்கள் போதுமானதாக இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. இதனால், இதுவரை அறிவியல் தொடர்பான வகுப்பு துவக்கப்படாமலேயே உள்ளது. எனவே உயர் கல்வித் துறை அமைச்சர் இந்த கல்லூரியில் கூடுதலாக பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

கிடப்பில் கட்டிட பணி

அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள ரீட் கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தில்  திருவெற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட திட்டமிட்டு துறை ரீதியான ஆவண நகர்வுக்காக திட்ட வரவு தயாரிக்கப்பட்டது.  ஆனால்  அதன் கோப்புகள் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் குறளகத்தில் உள்ள ரீட் கூட்டுறவு அலுவலகத்தில் கிடப்பில் உள்ளது. எனவே பள்ளி கல்வித்துறை மற்றும்  ரீட் கூட்டுறவு அதிகாரிகள் ஒன்றிணைந்து இந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவர்களின் பாதுகாக்க, கல்வித் தரத்தை மேம்படுத்த புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: