‘கரிசல் இலக்கியத்தின் தந்தை'கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் பிரமாண்ட மணிமண்டபம்

கோவில்பட்டி, செப். 20: ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ கி.ரா.வுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவில்பட்டியில் ரூ.2 கோடியில் பிரமாண்ட மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக நூலகத்துடன் அமையவுள்ள இந்த மணிமண்டபத்தின் பணிகள் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என்றழைக்கப்பட்டவர் கி.ராஜநாராயணன். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ராயங்கல கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம். 7ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா., பின்னர் எழுத்தாளராக மாறினார்.

அவர் எழுதிய ‘மாயமான்’ என்ற சிறுகதை 1958ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறுநாவல், நாவல், சிறுகதை, கிராமியக்கதை, கடிதம் என இலக்கியத்தின் பலதளங்களில் இயங்கியவர். ‘கரிசல் கதைகள்’, ‘கொத்தைப்பருத்தி’, ‘கோபல்ல கிராமம்’ போன்றவை கி.ரா.வின் முக்கிய படைப்புகள் ஆகும். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். உ.வே.சா. விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். ‘வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’ எனப்போற்றப்பட்ட கி.ரா. தள்ளாத வயதிலும் தளராமல் எழுதியவர். ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கில்லை, எழுதியதைப் படித்து அதை மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதுவேன் என்பார். நண்பர்களுக்கு நீண்ட கடிதம் எழுதும் வழக்கம் கொண்ட கி.ரா., அவர்களது பதில் கடிதங்களை பாதுகாத்து வந்த அவர், தற்போது கடிதத்துக்கான தேவை இல்லாமல் போய்விட்டது என்பாராம்.

கி.ரா.வின் ‘கிடை’ என்ற குறுநாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. விட்டுக்கொடுக்கும் எழுத்துலக அட்சயபாத்திரமான அவர், நல்ல இசை ஞானம் கொண்டவர். வயலின் இசையை கற்றவர். கொரோனா காலத்தில் வீடுகளுக்குள் முடங்கிப் பலர் தனிமையில் வாட, “எழுதப்படிக்க தெரிந்தவருக்கு எல்லாம் தனிமையே தெரியாது, இசை தெரிஞ்சவருக்கு ஏதய்யா தனிமை” எனக்கேட்டவர் கி.ரா. கொரோனா காலத்தில் ‘அண்டரெண்டப் பட்சி’ என்ற நூலை கையெழுத்து பிரதியாகவே வெளியிட்டார். தனது படைப்புகளுக்கான உரிமையை வாசகர் ஒருவருக்கு எழுதி வைத்தவர். இத்தகைய பல்வேறு பெருமைகள் வாய்ந்த கி.ரா. என்னும் கரிசல்காட்டுப்பூ, உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக தனது 99வது வயதில் காலமானார்.

அவர் உதிர்ந்துவிட்டாலும் அவரது எழுத்துகள் என்றென்றும் மணம் வீசிக்கொண்டே இருக்கின்றன. கி.ரா.வுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் சொந்த ஊரான கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கி.ரா. சிலையுடன் கூடிய நினைவகம், நூலக அறை, கண்காட்சி அறை, மின்னணு நூலக அறைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும்  இடைசெவலில் கி.ரா. படித்த பள்ளி ரூ.35 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவ்வப்போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் இந்த மணிமண்டபத்தில் பணிகள் அனைத்தும் முடிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் விரைவில் திறக்கப்பட உள்ளது.

Related Stories: