நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டிலேயே கணினி மூலம் ரத்தப் பரிசோதனை முடிவுகள்

நெல்லை, செப். 20: நெல்லை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை முடிவுகளை  தாமதம்  இன்றி வழங்குவதற்கு கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இதன்படி இனி நோயாளிகள்  இருக்கும் வார்டு கணினியிலேயே டாக்டர்கள், நர்சுகள் அறிந்து கொள்ள முடியும் என  டீன் ரவிசந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நெல்லை அரசு மருத்துவ  கல்லூரி  மருத்துவமனை ரத்த பரிசோதனை மையத்தில்  தினமும் 1200க்கும் மேற்பட்ட  பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள்  வழங்கப்படுகின்றன. இந்த பரிசோதனை  அறிக்கையை பணியாளர்கள் தற்போது கைகளால்  எழுதி வழங்கி வருகின்றனர். இதனால் கூடுதல்  காலதாமதம் மற்றும் காலவிரயம்  ஏற்படுகிறது.

  இதனை  தவிர்ப்பதற்காக கணினி  மூலம் பதிவு செய்து பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க  ஏற்பாடு செய்யப்படுகிறது.  இதன்படி பரிசோதனை முடிவுகளை பரிசோதனை மையத்தில்   அமைக்கப்பட்டுள்ள கணினியில் பதிவு செய்யும்போது அதனை  சம்பந்தப்பட்ட  வார்டில் கணினி மூலம்  டாக்டர்கள் மற்றும்  செவிலியர்கள் தெரிந்து கொள்ள  முடியும். இதனால்   மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளின் உறவினர்கள்  பரிசோதனை  ஆய்வு  மையத்திற்கு சென்று பரிசோதனை முடிவுக்காக நீண்ட வரிசையில்  காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.  

மேலும் வெளி நோயாளிகள் மட்டும்   பரிசோதனை மையத்தில் நேரிடையாக சென்று பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன்  வாங்கி செல்லவும் ஏற்பாடு  செய்யப்படுகிறது. தற்போது கணினி இணைப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருவதால்  அந்த பணியையும்  சேர்த்து பார்க்கின்றனர். இதனால் பரிசோதனை முடிவுகளை  வழங்குவதில்  தற்காலிகமாக சற்று காலதாமதம் ஏற்படுகிறது. ஒருசில தினங்களில்  இப்பணிகள்  நிறைவுபெற்று காலதாமதம் தவிர்க்கப்படும். இவ்வாறு டீன் டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார்.

Related Stories: