மக்கள் குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு நலஉதவி

நாகப்பட்டினம், செப்.20: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 217 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அன்னை சத்யா காப்பக வளாகத்தில் உள்ள முதியோர் இல்ல காப்பாளினியாக பணிபுரியும் வேதாரண்யம் தாலுகா செட்டிப்புலம் பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளி முதியோர்களுக்கு சேவை செய்வதில் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறுகின்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.55 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். டிஆர்ஓ ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: