முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை, செப்.20:  கோவை பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், கடந்த 7 மாதமாக சம்பளம் வரவில்லை என கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று பணிமாறுதல் பெற்ற 4 ஆசிரியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை சம்பளம் வழங்கவில்லை. இது தொடர்பாக, பல முறை புகார் அளித்தும் எவ்வித பயனுமில்லாத நிலையில், ஆசிரியர்கள் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து தங்களின் பிரச்னையை கூறியுள்ளனர். அவர், இரண்டு நாட்களில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இருந்த அதிகாரிகள் இதே பதிலை தான் கூறினார்கள். ஆனால், தற்போது வரை எங்களுக்கு சம்பளம் வரவில்லை. எனவே, சம்பளம் கிடைக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி 3 பெண் ஆசிரியர்கள் உள்பட 4 பேர் முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட சி.மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து பொதுமாறுதல் கலந்தாய்வு மூலம் ஆர்.கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் பணிமாறுதலாக சென்றோம். அங்கு பணி பொறுப்பு ஏற்றது முதல் தற்போது வரையான 7 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வரவில்லை.

இதேபோல், அங்கலக்குறிச்சி பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கும் சம்பளம் வரவில்லை. மாறுதல் பெற்ற பிறகு அதிகாரிகள் கேட்ட அனைத்து தபால்களும் அளிக்கப்பட்டது. ஆனால், சம்பளம் மட்டும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தோம். ஆனால், எவ்வித பலனும் இல்லை. இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள முதன்மை கல்வி அலுவலரை இரண்டு முறை சந்தித்து எங்கள் பிரச்னையை தெரிவித்தோம். இருப்பினும், சம்பளம் வழங்கவில்லை.

7 மாதமாக சம்பளம் இல்லாத காரணத்தினால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறோம். தற்போது, முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கேட்ட போது, இரண்டு நாட்கள் ஆகும் என்றார். இதே பதிலை பல முறை சொல்லி விட்டனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, சம்பளம் வழங்காமல் திரும்ப போக கூடாது என முடிவு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: