×

24 மணிநேர பாதுகாப்புக்கு உத்தரவாதம் ‘காவலன் ஆப்’ வழியாக 3 லட்சம் பேர் பயன் பெண்கள், பொதுமக்கள் அமோக வரவேற்பு

மதுரை, செப்.20: பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘மதுரை காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியை தற்போது வரை 3 லட்சம் பேர் பயன்படுத்தி, உரிய உதவிகளை பெற்றுள்ளனர். இதற்கான வரவேற்பும் பெருகி வருகிறது. தமிழகத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு செயலியாக தமிழ்நாடு காவல்துறையால் கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி உள்ளது. பெண்கள் மட்டுமின்றி முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், உடனே காவல் துறையை சம்பவ இடத்திற்கு அழைக்க இந்த செயலி போதுமானதாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். ‘எந்நேரத்திலும் உங்களுக்கு உதவ இந்த செயலி தயாராக உள்ளதை மறந்துவிட வேண்டாம்’ என போலீசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர். பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியே சென்று வீடு திரும்பும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பாக உணர ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை கட்டுப்பாட்டில் இந்த நவீன செயலி உள்ளது. அவசர காலத்திலோ, பாதுகாப்பற்ற சூழலிலோ இந்த காவலன் எஸ்ஓஎஸ் செயலி பொதுமக்களுக்கு உற்ற தோழனாக தோள் கொடுக்கிறது. இதில் பெறப்படும் புகார்களுக்கு காவல்துறையினரால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்செயலி தமிழ்நாடு காவல் துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மதுரை எஸ்பி.யாக இருந்த மணிவண்ணன் முயற்சியில் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

‘காவலன் டயல் 100’ என்ற அவசர உதவி எண் ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் இருந்தால், அவசர காலத்தில் 100 என்ற எண்ணிற்கு அழைக்க தேவையில்லை. செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் பட்டனை மட்டும் தட்டினால் போதும். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தொடர்ந்து ‘100’ என்ற அவசர உதவி எண்ணை அழைத்து ஆபத்து காலத்தில் உதவியைப் பெறலாம். அவசர தேவையின் போது, அந்த கைப்பேசியை அதிரச் செய்தாலே, காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும், அவர்கள் ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள் அல்லது நண்பர்கள் எண்ணிற்கும் இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் பட்டனை தட்டினால், மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்கள் கேமரா தானாக திறந்து, இருப்பிட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். அழைப்பவரின் இருப்பிட தகவல்கள் மற்றும் வரைபடம் அவர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கும் தானாகவே பகிரப்படும். காவலன் எஸ்ஓஎஸ் பட்டனில் தொட்டாலே போதும் உடனடியாக ஜிபிஎஸ் இயங்க ஆரம்பித்து ஸ்மார்ட்போன் கேமரா தானாகவே 15 வினாடிகள் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிவிடும்.

இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் தானியங்கி எஸ்எம்எஸ் எச்சரிக்கை மூலமாக இது செயல்படும். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை எஸ்பி அலுவலகம் சார்பில் காவலன் எஸ்ஓஎஸ் ஆப் கொண்டு வரப்பட்டதில் இருந்து பொதுமக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் இந்த வசதி உள்ளது. செயலியை பயன்படுத்துமாறு காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. கூகுள் ப்ளே ஸ்டோரில் காவலன் எஸ்ஓஎஸ் என்று தேடினால் தமிழக காவல் துறையின் முத்திரையுடன் இருக்கும். காவலன் ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த ஆப்பிற்கு ஆடியோ, ரெக்கார்டிங் அவசியம். மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பிற்கு இந்த செயலி பயன்படுத்தப்பட்டது. கடந்த கள்ளழகர் திருவிழாவில் அழகர் மலையில் இருந்து வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் சுவாமி திரும்பி மலைக்கு செல்லும் வரை கள்ளழகர் எங்கு உள்ளார் என்ற விபரத்தை ஆப் மூலம் 40 ஆயிரம் பொதுமக்கள் பார்த்துள்ளனர். தற்போது வரை 3 லட்சம் பேர் வரை இந்த ஆப் பயன்படுத்தி உள்ளனர்’’ என்றார்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...