திருவாரூர், செப். 13: அரசின் உத்தரவுபடி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றத்தை டீன் ஜோசப்ராஜ் துவக்கி வைத்தார். தமிழகத்தில் பொது மக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் தற்கொலைகளை தடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்கொலைகளுக்கு பயன்படுத்தப்படும் எலி பேஸ்ட் மற்றும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தற்கொலைகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பொது மக்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல்கட்டமாக நேற்று மாநிலம் முழுவதும் இருந்து வரும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனம் என்ற தலைப்பில் மனநல நல்லாதரவு மன்றம் துவங்கப்பட்டுள்ளது.
இதனை சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்துள்ள நிலையில் மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த மன்றம் துவக்க விழாவும் நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த மனநல நல்லாதரவு மன்றத்தினை டீன் ஜோசப்ராஜ் துவக்கிவைத்தார்.
இதில் துணை முதல்வர் ராஜேந்திரன், மனநல மருத்துவர் சூரியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் டீன் ஜோசப்ராஜ் கூறுகையில், கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரிடத்திலும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தின் மூலம் 5 மாணவர்களை ஒரு மருத்துவர் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களிடையே சிலரை தேர்வு செய்து அவர்கள் மூலமாகவும் மனகுழப்பத்தில் இருந்து வரும் மாணவர்களை கண்காணித்து இதுகுறித்து மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கவும் மாணவர் வழிகாட்டு குழுவினர் அமைக்கப்பட்டு இவர்கள் அனைவருக்கும் அடையாள பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு டீன் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார். டீன் துவக்கி வைத்தார்.