தூயகாற்று தின விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

நெல்லை, செப்.13: சர்வதேச தூய காற்று தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காற்று மாசுபாடு காரணமாக பூமியின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் மற்றும் காலநிலைகளும் மோசமாக பாதிக்கப்படுகிறது. எனவே மாசற்ற காற்று மனிதர்களுக்கு மட்டுமல்ல, பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இதையொட்டி நீலவானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காற்று தினத்தை முன்னிட்டு நேற்று கலெக்டர் விஷ்ணு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சுயம்பு தங்கராணி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் நக்கீரன், உதவி பொறியாளர் சசிரேகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த வாகனத்தின் மூலம் நெல்லை மாநகர பகுதியில் உள்ள புதிய பஸ்நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

Related Stories: