தென்காசி இந்து மகாசபா தென்மண்டல நிர்வாகி மாயம் டிஐஜியிடம் நிர்வாகிகள் புகார்

நெல்லை, செப்.13: தென்காசி மாவட்டத்தில் மாயமான அகில பாரத இந்து மகா சபா தென்மண்டல நிர்வாகியை கண்டுபிடித்து தரக்கோரி  நெல்லை சரக டிஐஜியிடம் அக்கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமாரிடம் அகில பாரத இந்துமகா சபா மா வட்ட செயலாளர் சுரேஷ்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பாப்பான்குளத்தை சேர்ந்த இசக்கிராஜா என்பவர் இந்து மகாசபா தென்மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் மர்ம நபர்கள் இசக்கிராஜா வீட்டில் நிறுத்தியிருந்த காரை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி.கிருஷ்ணராஜ் மற்றும் ஆழ்வார்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் இசக்கிராஜாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இசக்கிராஜா கேட்டுக் கொண்டதின் பேரில் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இதனிடையே விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இசக்கிராஜாவுக்கும் ஆழ்வார்குறிச்சி காவல்நிலைய அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இசக்கிராஜா திடீரென மாயமானார். அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மாயமான அகில பாரத இந்துமகா சபா தென்மண்டல தலைவர் இசக்கிராஜாவை  கண்டுபிடித்து மீட்டு தர வேண்டும். மேலும் அவரை கடத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்த போது மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் முத்தப்பா, மாநில துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: