×

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 197 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி

ஈரோடு, செப். 13: ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 31.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொது மருத்துவம்(எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவம்(பி.டி.எஸ்) போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் என்ற நுழைவுத்தேர்வு ஒன்றிய அரசின் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வு 7 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை என 5 கல்வி மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படித்த 623 மாணவ-மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வினை எழுதினர். 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 149 பேர் முதல் முறையாகவும், 48 பேர் இரண்டாவது முறையாகவும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 31.62 என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 41 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி, 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு