மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு வெடிகுண்டு வீசி கொல்வதாக மனைவியை மிரட்டிய ரவுடி கைது

புதுச்சேரி, செப். 9: மேட்டுப்பாளையத்தில் வெடிகுண்டு வீசி மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுவை மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் என்ற கழுகு குமார் (39). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவரது மனைவி சரிதா (38). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி சரிதா, வீட்டின் அருகே டிபன் கடை நடத்தி வருகிறார். ரவிக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கூரை வீட்டை தீயிட்டு கொளுத்தினார். இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரவிக்குமார், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். கடந்த 6ம் தேதி மீண்டும் மனைவியிடம் தகராறு செய்தார். தரக்குறைவாக திட்டிய அவர், மனைவியை வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சரிதா, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து ரவுடி ரவிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: