கடலூர் தொகுதியில் 10 வளர்ச்சி திட்டங்கள் துறைமுகம், நகர் பகுதி இணைக்க மேம்பாலத்துடன் கூடிய சாலை வசதி

கடலூர், செப். 9: தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பத்து முக்கிய திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு பணியை மேற்கொண்டு அறிக்கை வழங்க அறிவுறுத்திருந்தார். அதன்பேரில் கடலூர் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிக்காக கீழ்கண்ட பணிகள் நடைபெற ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் மனு வழங்கினார். மனுவில், மெரினா கடற்கரைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஆகும்.  இங்கு வரலாற்று பாரம்பரியமிக்க சான்றுகளான சர்இராபர்ட் கிளைவ் நினைவு கோட்டை அமைந்துள்ளது. இந்த நினைவு இல்லத்தையும் வெள்ளிக் கடற்கரையையும் மேம்படுத்த அனைத்து வசதிகளும் கூடிய சுற்றுலா தளமாக்கி கடலூருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

கடலூர் துறைமுகம் பகுதியில் ஏணிக்காரன் தோட்டம் வழியாக இருக்கக் கூடிய சுனாமி நகருக்கு அருகில் உள்ள உப்பனாற்றை கடந்து சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு மற்றும் அக்கரைகோரி பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையான மீனவ மக்கள் வசித்து வருகிறார்கள். கடலூர் ரயில்வே பாதையில் ஒரு புதிய மேம்பாலம் அமைத்து இந்த சாலையில் புருகீஸ்பேட்டை, வண்டிப்பாளையம் வரையில் சாலையை அகலப்படுத்தி கடலூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் விதமாக இருவழி சாலையாக மாற்றி அமைத்து வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், புருகீஸ்பேட்டை, கடலூர் துறைமுகப் பகுதியை இணைத்து மக்கள் பயன்பெறும் வகையில்  மேம்பாலத்துடன் சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும்.

தென்பெண்ணை, கெடிலம் மற்றும் மலட்டாறு ஆகிய ஆற்றின் கரைகள் உடைந்து வெள்ளத்தால் மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். அப்பகுதியை சுற்றியிருக்கும் மக்களை பாதுகாக்கும் விதமாக தென்பெண்ணையாறு, கெடிலம் மற்றும் மலட்டாற்றின் இரு கரைகளையும் உயர்த்தி, இருபுறமும் கான்கிரீட் மதில்சுவர் அமைத்து மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு தடுத்திடவும் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பினை ஏற்படுத்துவதை தடுத்திடும் வகையிலும் நிரந்திர தீர்வு காண வேண்டும். கடலூர் மாணவர்கள் வெளியில் சென்று வேலைத் அலைகின்றனர். இங்கு படித்த  மாணவர்கள் பயன்பெருகின்ற வகையில் தொழில்நுட்ப பூங்கா அல்லது தண்ணீர் பயன்பாடு குறைவாக உள்ள காலணி (Shoe) தயாரிப்பு நிறுவனம் அமைத்து வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.

பான்பரி மார்க்கெட், கடலூர் மஞ்சக்குப்பம் பேரறிஞர் அண்ணா மார்க்கெட், கடலூர் துறைமுகம் காமராஜர் மார்க்கெட் மற்றும் புதுப்பாளைம் மீன் மார்க்கெட் போன்ற அங்காடிகளில் மழைக் காலங்களில் வடிகால் வசதியின்றி மழைநீர் உட்புகுந்து பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்படுகிறது. வியாபாரிகளும் பொதுமக்களும் பயன்பெறும் விதமாக மிகவும் பழமை வாய்ந்த  மார்க்கெட்டுகளை மாற்றி பல்நோக்கு அடுக்குமாடி வணிக வளாகங்களாக மாற்ற வேண்டும். கடலூர் நகராட்சியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் நீண்ட நாட்களாகியும் தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: