குழாயில் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் ஆறாக ஓடிய குடிநீர்

நெல்லை, செப். 7: குழாயில் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் நேற்று குடிநீர் ஆறாக ஓடியது. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நெல்லை மாநகராட்சிக்கு விரைவில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பல்வேறு குடிநீரேற்று நிலையங்களில் தண்ணீர் ஏற்றப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விரைந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகன்குறிச்சியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை நெல்லை சந்திப்பில் காணப்படும் தச்சை மண்டல பழைய அலுவலக குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றும் பணிகள் நடந்தன. அப்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது. நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை, அதையொட்டியுள்ள போக்குவரத்து போலீஸ் நிழற்குடை ஆகியவற்றின் அருகே தண்ணீர் குளம் போல் தேங்கியது. மேலும் அப்பகுதியில் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், தண்ணீர் வெளியேற வழியின்றி காணப்பட்டது. நெல்லை சந்திப்புக்கு வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிதந்தபடியே சென்றன. மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து குடிநீரை வடிய வைக்கும் முயற்சியில் இறங்கினர்.

Related Stories: