×

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை வருகை பாதுகாப்பு பணிகளில் 1400 காவலர்கள்


நெல்லை, செப்.7: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை வருகையை முன்னிட்டு 12 மாவட்டங்களைச் சேர்ந்த 1400 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா நடைபெறவுள்ள மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நெல்லை மாவட்டத்தில் முதல்முறையாக அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று 7ம்தேதி தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்கிறார். அங்கு மாலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பியின் குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை துவக்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை (8ம்தேதி) காலை 10 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதனையடுத்து விழா நடைபெறவுள்ள மேடை பகுதிகளிலும் மைதானத்திலும் வெடிகுண்டு பொருட்களை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இதையொட்டி மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் ஏடிஜிபி தாமரைகண்ணன் தலைமையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், தென்மண்டல ஐஜி ஆஸ்ராகர்க், டிஐஜிக்கள் திண்டுக்கல் சரகம் ரூபேஷ்குமார் மீனா, மதுரை சரகம் பொன்னி, நெல்லை சரகம் பிரவேஷ்குமார், எஸ்பிக்கள் நெல்லை சரவணன், தூத்துக்குடி பாலாஜி சரவணன், தென்காசி கிருஷ்ணராஜ், திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் கிழக்கு மண்டலம் சீனிவாசன், மேற்கு மண்டலம் சரவணகுமார், தலைமையிடம் அனிதா, திருச்சி மாநகர தலைமையிடம் சுரேஷ்குமார், திருப்பூர் மாநகரம் வனிதா மற்றும் சென்னையிலிருந்து வந்துள்ள உளவு துறை எஸ்பிக்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலிருந்து தலா 50 பேர் வீதம் 600 போலீசாரும், நெல்லை மாவட்டத்திலிருந்து 600 போலீசாரும் மற்றும் மணிமுத்தாறு, ராஜபாளையம் பட்டாலியன் போலீசார் சுமார் 200 என மொத்தம் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் ஊர்காவல் படையினரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாளை, பேட்டை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, கங்கைகொண்டான் உள்ளிட்ட தீயணைப்பு நிலைங்களிலிருந்து 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு டூவீலர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 14, மருத்துவ வாகனங்கள், அரசு டாக்டர்கள் குழுவினர் ஆகியோர் விழா நடைபெறும் பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

விழா நுழைவு வாயில்களில் மெட்டல் டோர் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தற்காலிகமாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவைகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள போலீஸ் அதிகாரிகள், மானிட்டர் மூலம் கண்காணிக்கின்றனர். ட்ரோன் கருவிகள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. முதல்வர் பங்கேற்கும் விழா மேடை, மைதானம் ஆகியவை இன்று காலை முதல் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி நெல்லை  மாநகரத்தில் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை போலீசார்  மற்றும் உளவு துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்களில் சந்தேகம்படும்படியானவர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Nella ,
× RELATED செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி...