திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் சங்கு ஊதி போராட்டம் பேச்சுவார்த்தையால் வாபஸ்

திருவிடைமருதூர், செப்.6: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் விதிமுறைகளை மீறி பணி நியமனம் செய்ய உள்ளதாக அகில பாரத இந்து மகா சபாவினர் சங்கு ஊதி போராட்டம் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நவக்கிரக தலங்களில் ராகு தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் வாரிசுதாரர் முறையில் பணி நியமனம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து கோயிலில் பணியாற்றும் ஊழியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அகில பாரத இந்து மகா சபாவின் ஆதரவுடன் நேற்று கோயில் அலுவலகம் முன்பு சங்கு ஊதி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். நேற்று இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர் ராம நிரஞ்சன் தலைமையில் 20 பேர் கோயிலுக்குள் சென்றனர். அப்போது கோயில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) உமாதேவி போராட்ட குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கோயில் மேலாளர் நடராஜன், திருநீலக்குடி போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உதவி ஆணையர் பேசுகையில், இக்கோயிலில் இனிவரும் காலங்களில் அனைத்து காலி பணியிடங்களும் அறநிலையத் துறையின் அனுமதி பெற்று, அனைத்து விதிமுறைகளை பின்பற்றி, வெளிப்படையாக அறிவிப்பு செய்து, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்து மகா சபா குழுவினர் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: