×

அரியலூர் மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தில் 740 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை

அரியலூர்,செப்.6: அரியலூர் மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தில் 740 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவி தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தில் காணொலிக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தில் முதற்கட்டமாக 740 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 740 மாணவிகளுக்கு வழங்கும் விதமாக அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 147 மாணவிகளும், ஜெயங்கொண்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 83 மாணவிகளும், மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவிகளும், மார்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகளும், அன்னை ஞானம்மா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 28 மாணவிகளும், நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 32 மாணவிகளும், நெல்லியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவிகளும், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகளும், அரசு மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவிகளும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளும் என நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மொத்தம் 375 மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய ”புதுமைப் பெண்” பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர செயலாளர் முருகேசன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், துணை தலைவர் கலியமூர்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா இளையராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோனல் பெனிடிக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...