×

நெய்வேலியில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையம் அமைக்க வேண்டும்

கடலூர், செப். 6: நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய 10 அம்ச கோரிக்கை திட்டங்கள் தொடர்பான அறிக்கை மனுவை தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்க மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய 10 கோரிக்கை திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்க சட்டமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். எடுக்கப்படும் நிலங்களுக்கு தொழில் நிறுவன சட்ட விதிகளின்படி மதிப்பிட்டு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும். நெய்வேலி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி நகரம், பண்ருட்டி ஒன்றியம்-30 கிராம ஊராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியம்-12 ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து நெய்வேலிக்கு தனி வட்டாட்சியாகவும், தனி ஊராட்சி ஒன்றியமாகவும் அமைத்து கொடுக்க வேண்டும். சுற்று வட்டார பொதுமக்கள் பயன்பாடுக்கு என்எல்சிக்கு சொந்தமான பொது மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் செய்ய ஆவணம் செய்ய வேண்டும்.

 காடாம்புலியூர் ஊராட்சியில் சிட்கோ தொழிற்பேட்டை விரைவாக அமைத்து, அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியும் இந்த பகுதியில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவிட வேண்டும். என்எல்சி 2 சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மக்கள் பயன்பாட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும். சாலை, ஏரி, குளங்கள் மற்றும் பொது இடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்திரா நகர் மாற்று குடியிருப்பு பகுதியில் 4,200 பேருக்கு என்எல்சியால் வீட்டு மனைகள் வழங்கப்பட்டு 30 வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய பெயரில்  பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெய்வேலியில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையம் அமைத்து இப்பகுதி மாணவ-மாணவியர்களின் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்ய வேண்டும்.

Tags : Neyveli ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...