×

குடியிருப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திரா நகர் பகுதி பொதுமக்கள்

விருத்தாசலம், செப். 6: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் இந்திரா நகரில் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகள், மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுவதற்கான பணிகளில் கடந்த சில தினங்களாக விருத்தாசலம் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 4 கட்டங்களாக நிறைவேற்றப்பட்ட பணியில் கடைகள், மாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்திரா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளும் இடிக்கப்படும் என வருவாய்த்துறையினர் மக்களுக்கு அறிவிப்பு கொடுத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருவதுடன், உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் வருகின்றனர்.

வருகின்ற 9ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு பகுதிகள் அனைத்தையும் இடித்து முல்லா ஏரியை காண்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்ததன் பேரில், அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்கு நேற்று தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றனர்.அப்போது, அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதனால் உச்ச நீதிமன்றம் பதில் தரும் வரை கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் 8ம் தேதி வரை கால அவகாசம் தந்து அதற்குள் நீதிமன்ற உத்தரவு வந்தால் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்படும்.

உத்தரவு வரவில்லை என்றால் 8ம் தேதி முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்கள் மற்றும் வீடுகளும் இடிக்கப்படும் என சார் ஆட்சியர் பழனி பதிலளித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்து அப்பகுதி மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் திராவிட மணி, தொகுதி செயலாளர் அய்யாயிரம், மாநில துணை செயலாளர்கள் ராஜ்குமார், நீதி வள்ளல், நகர செயலாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Indira Nagar ,Sir ,Vriddhachalam ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...