×

ஆவணி மூலத்திருவிழா கோலாகலம் மானூரில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி அருளினார்

நெல்லை, செப். 6: கருவூர் சித்தருக்கு மானூர் அம்பலவாணர்   கோயிலில் சுவாமி நெல்லையப்பர், அம்பாள் காந்திமதி காட்சி அருளும் வைபவம்  நேற்று காலை விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்   செய்தனர். கீரனூரில்  அந்தணர் குலத்தில் பிறந்தவர் கருவூர்  சித்தர். அவர் தம்மை அறிந்த தலைவனை  தன்னுள் கண்ட பெருமை உடையவர். பல்வேறு  சிவ தலங்களுக்கு சென்று ஈசனை  தரிசித்து வரங்கள் பெற்று நெல்லையில் உள்ள  நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த  கருவூர் சித்தர் கோயில் வாசல் முன் நின்று  சுவாமி நெல்லையப்பரை  ‘‘நெல்லையப்பா’’ என மூன்று முறை அழைத்தார். கருவூர்  சித்தரை சோதிக்க எண்ணியதால் அவர் கூப்பிட்ட குரலுக்கு நெல்லையப்பர் வரவில்லை. இதனால் கோபமுற்ற சித்தர் இங்கு இறைவன் இல்லை எனவே எருக்கு எழ சாபமிட்டு   மானூர் அம்பலவாணர் கோயில் சென்றடைந்தார். அங்கு நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சி அளித்தார். இந்த வைபவம்  ஆண்டுதோறும் ஆவணி  மூலத்  திருவிழாவின் 10வது நாளில் மானூர் அம்பலவாணர் சுவாமி கோயிலில்  நெல்லையப்பர்,  காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் ஆவணி மூல மண்டபத்தில்  எழுந்தருளி கருவூர்  சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவமாக நடக்கிறது.

இந்த ஆண்டு திருவிழா  சுவாமி  நெல்லையப்பர் கோயிலில் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதையொட்டி 4ம்  திருவிழாவன்று காலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச  மூர்த்திகளுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும்,  தொடர்ந்து இரவு சுவாமி,  அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள்  ரதவீதி உலாவும் நடந்தது. 9ம்  திருநாள் இரவு 7 மணிக்கு கரூவூர் சித்தர், மானூர் அம்பலவாணசுவாமி கோயிலை  சென்றடைந்தார். இதையடுத்து  10ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு  நெல்லையப்பர் கோயிலில்  இருந்து சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா,  சண்டிகேஸ்வரர்,  தாமிரபரணி தேவி, அகத்தியர், குங்கலிய நாயனார் ஆகியோர்  மானூர் அம்பலவாணர்  சுவாமி கோயிலுக்கு எழுந்தருளி அதிகாலை 5 மணிக்கு  சென்றடைந்தனர்.  அங்கு காலை 7 மணிக்கு மேல் கரூர் சித்தருக்கு சுவாமி காட்சி  அளித்து சாப விமோசனம் நிவர்த்தி அளிக்கும் வைபவம் நடைபெற்றது. இந்த   நிகழ்ச்சியில் மானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும்   ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Nellaiyapar ,Karuur Siddha ,Moolathruvizha ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் டிஎம்பி...