×

கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் மதுராந்தகத்துக்கு பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி, செப். 3: கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர பேருந்து மற்றும் கிராம பேருந்துகள் என சுமார் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 31ம் தேதி கள்ளக்குறிச்சி பணிமனை-2ல் இருந்து ஈரியூர் கிராமத்துக்கு சென்றுவிட்டு பின்னர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த டவுன்பஸ் கள்ளக்குறிச்சி-சேலம் மெயின்ரோடு பகுதியில் திடீரென பழுதாகி பாதிவழியில் நின்றதால் அந்த சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்க முடியாமல் பல பேருந்துகள் பாதியிலேயே பழுதாகி நின்று விடுகின்றன. பின்னர் மெக்கானிக் வரவழைத்து சரிசெய்த பின்னரே பேருந்துகளை இயக்க முடியும் அவல நிலையில் இருந்து வருவதாகவும், இதுபோன்ற சிறு குறைகளையும் சரிசெய்ய புகார் தெரிவித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதுவும் நடவடிக்கை எடுப்பதில்லை என அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து 2வது பணிமனை கிளை மேலாளர் கோவிந்தராஜ் என்பவர் 24 மணி நேரத்துக்குள் மதுராந்தகம் பணிமனைக்கு செல்ல வேண்டும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் பொது மேலாளர் செல்வமணி அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மதுராந்தகத்தில் பணியாற்றிய போக்குவரத்து கிளை மேலாளர் குமார் என்பவர் கள்ளக்குறிச்சி போக்குவரத்து பணிமனை-2ன் கிளை மேலாளராக நியமனம் செய்ததையடுத்து அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kalakurichi Government ,Branch ,Madhuranthak ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...