தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

தூத்துக்குடி, செப்.3: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (4ம் தேதி) வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடக்கிறது என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1.08.2022 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இத்திட்டத்தின்படி இணையவழிமுறையில் வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம்-6 ஐ www.nvsp.in  https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், ‘வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப்’ என்ற என்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இப்பணியில் வாக்காளர்களின் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நாளை (ஞாயிற்றுகிழமை) சிறப்பு முகாம் நடத்திட தெரிவிக்கப்பட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1611 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 10மணிமுதல் மாலை 5மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.

சிறப்பு முகாம் நாளன்று வாக்காளர்கள் நேரடியாக தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அலைபேசி எண் போன்ற விவரங்களை படிவம்-6பி-ல் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக சமர்ப்பிக்கவேண்டும். சிறப்பு முகாமில் பெறப்படும் ஆதார் எண் விபரங்கள் கருடா செயலி மூலம் உடனுக்குடன் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறைவாக உள்ளதால் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: