×

எட்டயபுரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

எட்டயபுரம், செப்.3: சீவலப்பேரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் எட்டயபுரம் மக்களுக்கு முழுமையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளதால், வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. அத்தகைய புரட்சி கவிஞர் பிறந்த எட்டயபுரத்தில்  குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2008ம் ஆண்டு முதல் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆரம்பகாலங்களில் நூற்றுக்கணக்கில் இருந்த குடிநீர் இணைப்புகள், ஆண்டுகள் செல்ல செல்ல ஆயிரக்கணக்கில் இணைப்புகளாக மாறியது. இதனால், எட்டயபுரத்திற்கு தினமும் தண்ணீர் தேவை 9.50 லட்சம் லிட்டராக உயர்ந்தது.

ஆனால் தற்போது சுமார் 6 லட்சம் லிட்டர் தண்ணீரே வழங்கப்படுகிறது. இதனால் தினமும் 3.50 லட்சம் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்கு சீராக தண்ணீர் விநியோகிப்பதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. எட்டயபுரத்தின் தற்போதைய மக்கள்தொகை 12,272 ஆகும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு எழுபது லிட்டர் தண்ணீர் வழங்கவேண்டும் என்பது அரசு விதி. மேலும் தற்போது 3219 குடிநீர் இணைப்புகள் உள்ளது. 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு வாரத்திற்கும் மேல் தாமதமாகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கும், பிற தேவைக்கும் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

   தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரியிலிருந்து செல்லும் குடிநீர் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து கழுகுமலை, எட்டயபுரம், சாத்தூர் ஆகிய இடங்களுக்கு பிரித்து அனுப்பபடுகிறது. இதன் இடைவெளியில் உடைப்பு ஏற்படுவதாலும், மின்தடை காரணமாகவும் சரியாக தண்ணீர் எட்டயபுரத்திற்கு வருவதில்லை. மேலும் உடைப்பு ஏற்படும் போது சரிசெய்ய மூன்று நாள்கள் ஆகிறது என்பதால் தண்ணீர் விநியோகம் செய்ய 5 நாட்கள் ஆகிறது. இதனால் தண்ணீர் விநியோகிக்க காலதாமதமாகிறது. எனவே எட்டயபுரத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்க எட்டயபுரம் வழியாக அருப்புக்கோட்டை, விருதுநகர் செல்லும் வல்லநாடு குடிநீர் திட்டத்தின் மூலம் எட்டயபுரத்திற்கும் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எட்டயபுர மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்தனர்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எட்டயபுரம் வழியாக அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகருக்கு வல்லநாடு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்தபோது எட்டயபுரத்தையும் அந்த திட்டத்தில் சேர்த்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்போதிருந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் எட்டயபுரத்திற்கு சீவலப்பேரி குடிநீரே போதுமானது எங்களுக்கு வேண்டாம் என அந்த திட்டத்தை புறக்கணித்து விட்டனர். அதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக போனது. அப்போதே இந்த திட்டத்தில் சேர்ந்திருந்தால் தற்போது எட்டயபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது.

கலங்கலாக வரும் குடிநீர்
 ஆரம்பகாலங்களில் விநியோகம் செய்யப்பட்ட சீவலப்பேரி குடிநீர் சுத்தமாக குடிப்பதற்கு சுவையாக இருந்தது. சீவலப்பேரி குடிநீர் என்றால் அது ஒரு டிரேடு மார்க்காக இருந்தது. தற்போது சீவலப்பேரி குடிநீர் தன்மை முற்றிலும் மாறிப்போனது. தண்ணீரை குடங்களில் பிடித்து வைத்து இரண்டு, மூன்று நாட்கள் சென்ற பின்தான் தண்ணீர் வெண்மை நிறத்திற்கு வருகிறது. அதுவரை தண்ணீர் கலங்கலாக உள்ளது. கட்டாயம் குடித்தே ஆகவேண்டும் என்பவர்கள் மட்டும் தான் சீவலப்பேரி தண்ணீரை குடிக்க பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் தினமும் கேன் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.

தேக்கி வைத்து விநியோகம்
எட்டயபுரத்தில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் ஆண்டு முழுவதும் குளிப்பதற்கும் சிறார்கள் நீச்சல் கற்றுக்கொள்வதற்கும் பயன்படுகிறது. இது தவிர எட்டயபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 3 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றும், ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரை தள நீர்த்தேக்க தொட்டி ஒன்றும், பஸ்நிலையம் அருகே 2 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றும் உள்ளது. இதன் மூலம் சீவலப்பேரி குடிநீர் தேக்கி வைத்து விநியோகம் செய்யப்படுகிறது.

Tags : Ettayapuram ,
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...