×

கடையத்தில் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை நெல்லை முதன்மை நீதிமன்றம் உத்தரவு

கடையம், செப். 3: கடையத்தில் சொத்து தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடையம் தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜா (63). இவருக்கு வெள்ளையம்மாள், சுசந்தா ஆகிய இரு மனைவிகள். இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ளனர். இரு மனைவிக்கும் தங்கராஜா சொத்துகளை பிரித்துக் கொடுத்தார். இதில் முதல் மனைவியின் மகனான திருக்குமரனுக்கு (46), சொத்துகளை பிரித்து கொடுத்ததில் திருப்தி இல்லாமல் இருந்து வந்தார். இதனால் சொத்து தொடர்பாக திருக்குமரனுக்கும், தங்கராஜாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 27-11-2020ல் திருக்குமரன் அவரது வயலில் வேலை பார்த்து விட்டு அங்குள்ள வரப்பில் புல் கட்டுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தங்கராஜா, திருக்குமரனிடம் இந்த பாதை வழியாக நீ இனிமேல் வரக்கூடாது. உன்னுடைய வயல் வெளியில் உள்ள வரப்பினை நீ பயன்படுத்த வேண்டும் என சத்தம் போட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு முற்றவே தந்தை என்றும் பார்க்காமல் திருக்குமரன் தன்னிடமிருந்த அரிவாளால் தங்கராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிந்து திருக்குமரனை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு விசாரித்து திருக்குமரனுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜரானார்.

Tags : Paddy Primary Court ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...