×

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா மானூருக்கு கருவூர் சித்தர் எழுந்தருளும் வைபவம்

நெல்லை, செப். 3: நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் கருவூர் சித்தர், மானூர் அம்பலவாணர் கோயிலுக்கு எழுந்தருளும் வைபவம் இன்றிரவு 7 மணிக்கு நடக்கிறது. நாளை மறுநாள் (5ம் தேதி) கரூவூர்  சித்தருக்கு சுவாமி காட்சியளித்து  சாப விமோசன நிவர்த்தி அளிக்கிறார். கீரனூரில் அந்தணர் குலத்தில் சூரியன் அருளால் பிறந்தவர் கருவூர் சித்தர். அவர் கலைகள் முழுவதும் கற்றுத் தேர்ந்தவர். தம்மை அறிந்த தலைவனை தன்னுள் கண்ட பெருமை உடையவர். அவர் பல்வேறு சிவ தலங்களுக்கு சென்று விட்டு ஈசனை தரிசித்து வரங்கள் பெற்று நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சுவாமியை தரிசிக்க வந்தார். தான் அழைத்தவுடன் தனக்கு இறைவன் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தினை பெற்றிருந்தார் கருவூர் சித்தர். நெல்லையப்பர் கோயில் வாசல் முன் நின்று சுவாமி நெல்லையப்பரை ‘‘நெல்லையப்பா’’ என மூன்று முறை அவர் அழைத்தார். ஆனால் கருவூர் சித்தரின் கூப்பிட்ட குரலுக்கு நெல்லையப்பர் செவிசாய்க்கவில்லை. இதனால் கோபமுற்ற சித்தர், இங்கு இறைவன் இல்லை என்றும் எருக்கு எழ எனவும் சாபமிட்டு வடக்கு நோக்கி பயணித்தார்.

அப்போது மானூரில் அம்பலவாண முனிவரை சந்தித்து நடந்ததை கூறினார். அவரோ தாமதமாக வந்தாலும் தானாக வந்து தரிசனம் தருவான் நெல்லையப்பன் என்று கூறி சித்தரை ஆற்றுதல் படுத்தினார். இதேபோல் நெல்லையப்பர் மானூரில் கருவூர் சித்தருக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வே ஆவணி மூலத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆவணி மூலத்திருவிழா, நெல்லையப்பர் கோயிலில் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 4ம் திருவிழாவன்று காலையில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஷ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச  மூர்த்திகள் ரத வீதியுலா நடந்தது.

9ம் திருநாளான (செப்.3ம் தேதி)  இன்று இரவு 7 மணிக்கு   கரூவூர் சித்தர், எழுந்தருளி ரதவீதி வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோயிலை சென்றடைகிறார். ஆவணி  மூல 10ம் திருநாளான நாளை (4ம் தேதி) இரவு 1  மணிக்கு நெல்லையப்பர்  கோயிலில் இருந்து சந்திரசேகரர், பவானி அம்மாள்,  பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர்,  தாமிரபரணி தேவி, அகத்தியர், குங்கலிய நாயனார்  ஆகியோர் மானூர் அம்பலவாணர் சுவாமி கோயிலுக்கு புறப்பட்டு 5ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சென்றடைகின்றனர். அங்கு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கரூவூர்  சித்தருக்கு சுவாமி காட்சி அளித்து சாப விமோசனம் நிவர்த்தி அளிக்கும் வைபவம் நடக்கிறது.

Tags : Avani Moolathruvizha ,Nellaiappar Temple ,Karuvur Siddhar ,Manur ,
× RELATED ஆனிப்பெருந்திருவிழா பணிகளை துவக்க...