×

திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல திருவிழா கொடியேற்றம்

திசையன்விளை, செப். 3: திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். திசையன்விளையில் அமைந்துள்ள புகழ்பெற்ற உலக ரட்சகர் திருத்தல திருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான நேற்று பனிமய அன்னை, லூர்து அன்னை, உபகார அன்னை, பாத்திமா அன்னை அன்பியங்கள் சிறப்பித்தன. மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் கொடியை ஆசீர்வதித்து ஏற்றினார்.

கொடிமரத்தின் பக்கவாட்டில் நேர்ச்சை கொடிகள் ஏற்றப்பட்டன. வாணவேடிக்கை மற்றும் இறைமக்கள் கரகோஷத்துடன் கொடியேற்று விழா நடந்தது. விழாவில் மன்னார்புரம் அன்னை தெரசா மைய நிர்வாகி விக்டர், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ், பங்குத்தந்தையர்கள் ஜேக்சன் (செய்துங்கநல்லூர்), லூசன் (கூட்டப்பனை), லெனின் (மணப்பாடு), ஸ்டார்லின் (தோப்புவிளை), அருட்திரு அருள்பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பலியும், நன்மை செய்வதில் மனம் தளராதீர்கள் என்ற தலைப்பில் அருட்திரு லெனின் டி ரோஸ் மறையுரையும் நடந்தது. இதில் இறைமக்கள், பக்தர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று  ஸ்டெல்லா மாரீஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள்  சிறப்பிக்கின்றனர். காலை அருட்திரு ஜோசப் ஸ்டாலின் தலைமையில் திருப்பலியும், மாலை தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் என்ற தலைப்பில் அருட்திரு ததேயூஸ்ராஜன் மறையுரையும், தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை திருப்பலியும், மாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

வருகிற செப்.9ம் தேதி 8ம் திருவிழா மாலை நகர வீதிகள் வழியாக நற்கருணை பவனி நடக்கிறது. 9ம் திருவிழா மாலை கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு ஆலயத்தை சுற்றி சப்பர பவனியும் நடக்கிறது. 10ம் நாள் விழாவன்று காலை திருவிழா திருப்பலியும், மதியம் நகர வீதிகளில் சப்பர பவனியும், மறுநாள் மாலை அசன விருந்தும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அந்தோனி டக்ளஸ், பங்குப்பேரவை, அருட்சகோதரிகள், அன்பியங்கள், இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Vector World Savior Shrine Festival ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...