மானாமதுரை அருகே பருவ மழைக்கால பேரிடர் மீட்பு ஒத்திகை

மானாமதுரை, செப். 3: மானாமதுரை அருகே கள்ளர்வலசை கிராமத்தில் மழை, வெள்ளக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தற்போது தொடர்ந்து மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்தாண்டு மழைக்காலத்தில் மானாமதுரை உப்பாற்றில் வந்த வெள்ளத்தால் செய்களத்தூர், கள்ளர்வலசை உள்ளிட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. இந்தாண்டு மானாமதுரை உப்பாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மானாமதுரை தீயணைப்புத்துறை சார்பில் தாசில்தார் சாந்தி முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள் கள்ளர்வலசை உப்பாற்றில் அவசரகால பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆறு, கண்மாய்களில் தண்ணீரில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்து வீரர்கள் செயல் முறை விளக்கம் செய்து காட்டினர். ரப்பர் படகில் சென்று மீட்பு பணி செய்வது, ரப்பர் வளையத்தைக் கொண்டு தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி  சிகிச்சை மேற்கொள்வது குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

Related Stories: