×

விநாயகர் சதுர்த்தியையொட்டி தாராபுரம் அமராவதி ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன் 70 சிலைகள் விஜர்சனம்

தாராபுரம், செப்.2: தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதற்கட்டமாக 70 சிலைகள்  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன்  கரைக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் விஜர்சன ஊர்வலம் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து மக்கள் கட்சி அமைப்பு சார்பில் நடந்தது. இமகவினர் தாராபுரம் நகர ஒன்றிய பகுதிகளில் நேற்று அதிகாலை பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்திய 52 விநாயகர் சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர், தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை ரவுண்டானா பகுதியில் அணிவகுத்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து மதியம் 1 மணி அளவில் இமக மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாநில நிறுவனர் அதிரடி சரஸ்வதி பேரணியை துவக்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் பிரேம்குமார் மாவட்ட செயலாளர் சங்கர் மாநில செயலாளர் விஜயகுமார், காங்கயம் ஒன்றிய தலைவர் கலைவாணன், நகர இளைஞரணி தலைவர் சுரேஷ், மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி சாலை வழியாக வழியாக போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அமராவதி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, சிலைகள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு ஓடுவதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு சிலைகளாக பெற்று தீயணைப்பு துறையினர் கரைத்து விஜர்சனம் செய்தனர்.

இதேபோல, தாராபுரம் நகர ஒன்றிய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 18 சிலைகளையும் தாராபுரம் உடுமலை சாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து கிராம கோயில் பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாந்தி தங்கவேல் ஊர்வலத்தை துவக்கி வைத்தார், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், அமைப்பாளர் அம்பிகாபதி, நகர அமைப்பாளர் கார்த்திகேயன், கோட்ட அமைப்பாளர் குமரவேல், வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அமராவதி ஆற்றுங்கரையை அடைந்தனர்.

இதையடுத்து, 18 சிலைகளுக்கும் அங்கு சிறப்பு பூஜை செய்து போலீசார் முன்னிலையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகளை வீரர்கள் கரைத்தனர். இதனை முன்னிட்டு தாராபுரம் டிஎஸ்பி தனராசு தலைமையில் நகரம் முழுவதும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Vinayagar Chaturthi ,Tarapuram Amaravati river ,
× RELATED விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள்...