×

காங்கயம் தாலுகா அலுவலகத்தில் பெண் விவசாயி தீக்குளிக்க முயற்சி

காங்கயம் செப்.2: காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பெண் விவசாயி தீக்குளிக்க முயற்சித்தார். அவரை துணை தாசில்தார் மற்றும் போலீசார் தடுத்து விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட  சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாமணி (55). பெண் விவசாயி. இவருக்கு சொந்தமாக 4.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலத்திற்கு அருகிலேயே உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன கிளை வாய்க்காலில் இருந்து 10வது இடது கிளை வாய்க்காலின் மூலம் விவசாய பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் சாந்தாமணி தோட்டத்தின், பக்கத்தில் உள்ள மற்றொரு நிலத்தின் வழியாக தான் வந்து சேர வேண்டும்.

இந்நிலையில் தனது நிலத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்துவிட்டதாக கூறி கலெக்டர், துணை கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் மனு அளிக்க நேற்று மாலை 4 மணியளவில் காங்கயம் தாலுகா அலுவலகத்திற்கு சாந்தாமணி, தனது மகன் ஹரி செல்வத்துடன் வந்தார். அப்போது தொடர்ந்து அதிகாரிகள் தனது மனு மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக கூறிய அவர், கேனில் இருந்த பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை துணை தாசில்தார் மோகன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மறுநாள் (இன்று) காலையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்வதாக கூறி பெண் விவசாயி சாந்தாமணியை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kangayam taluk ,
× RELATED காங்கயம் இன மாடுகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை