×

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்தால் தீவாக மாறிய அக்கரை ஜெயங்கொண்டபட்டினம்

சிதம்பரம், செப். 2 :    சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில்  தண்ணீர் வரத்தால் தீவாக மாறிய அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தை ஆட்சியர் பாலசுப்ரமணியம் படகில் சென்று ஆய்வு செய்தார். வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என  ஆட்சியர் கூறியுள்ளார். மேட்டூரில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் ஓடி கடலில் கலக்கிறது. சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி உள்ளிட்ட 3 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் இந்த கிராமம் தனித்தீவாக மாறியது. இதையடுத்து ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேற்று இந்த கிராமத்திற்கு சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து படகு மூலம் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்திற்கு சென்றனர்.  கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வருவதையும் அந்தத் தண்ணீர் கிராமத்தின் இருபுறமும் ஓடி கடலில் கலப்பதையும் வரைபடம் மூலம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

மேலும் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பார்வையிட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்படும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழத்திருகழிப்பாலை  கிராமத்தில் வெள்ளத்தால் சாலை அரிப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். பின்னர்  ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் ஆட்சியர் பாலசுப்ரமணியம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் 3 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
இதில் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டேன். அங்கு 2 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படட்டுள்ளன. அங்குள்ள மக்கள் தங்களுக்கு மேடான ஒரு பகுதியில் இடமும் பட்டாவும் கொடுத்து அதில் வீடு கட்டி தந்தால் அது நிரந்தர தீர்வாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்கள்.
      
இதுகுறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளேன். மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் இன்னும் 2 தினங்களில் படிப்படியாக குறைந்து விடும். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு செல்லலாம். அதன் பிறகு  அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும், என்றார்.

Tags : Akkarai Jayangondapatnam ,Kollidam river ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி