×

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

அலங்காநல்லூர், செப். 2: அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் ஊரக வளர்ச்சி திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று கூடுதல் ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் முடுவார்பட்டி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி ஆகிய ஊராட்சி அரசு பள்ளிகளில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட நம்ம ஊரு சூப்பர் என்ற தமிழக அரசின் கிராமப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் கல்லணை ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் இயந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரிப்பதற்கு தேவையான உயர் ரக தரம் பிரிக்கும் கூடம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான இடம் தேர்வு செய்ய ஊராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் மரக்கன்றுகள் வளர்க்கும் பண்ணை, அரசு பள்ளியில் இயங்கும் சமையல் கூடத்தை ஆய்வு செய்து, பள்ளி மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை கேட்டறிந்தார். பின்னர் கல்லணை ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள், ஊராட்சி திட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, ஒன்றிய பொறியாளர் துரைக்கண்ணன். ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்லணை சேதுசீனிவாசன், முடுவார்பட்டி ஜெயமணி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Alankanallur Union ,
× RELATED அலங்காநல்லூர் அருகே சேதமடைந்த...