சின்னாளபட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சிவசேனா சார்பில் நடந்தது

சின்னாளபட்டி, செப். 2: சின்னாளபட்டியில் சிவசேனா கட்சி சார்பாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சிவசேனா மாநில பொதுச் செயலாளர் சி.கே.பாலாஜி துவக்கி வைத்தார். ஊர்வலம் பேருந்து நிலையத்தில் தொடங்கி பூஞ்சோலை, தேவாங்கர் பள்ளிகள் சாலை, என்சிசிரோடு, காமராஜர் சாலை வழியாக சென்று சீவல்சரகு ஊராட்சி குளத்தில் கரைக்கப்பட்டது.

ஆத்தூர் ஒன்றியத்தில் சிவசேனா அமைப்பின் சார்பாக பல இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவசேனா சார்பாக வைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் டிராக்டர், வேன்களில் சின்னாளபட்டி பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிவசேனாவின் மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகபாண்டி முன்னிலை வகித்தார்.மாநில சிவசேனா அமைப்பாளர் சி.கே.பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்துவிட்டு பேசுகையில், விநாயகர் சதுர்த்தி ஒன்று தான் இந்துக்கள் அனைவரையும் இணைக்கும் விழாவாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்துக்களுக்கு பாதுகாப்பான இயக்கமாக இருப்பதை விட்டுவிட்டு இந்து கட்சிகளை புறக்கணிக்கும் இயக்கமாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பார்வர்டு பிளாக் கட்சியின் ரவிக்குமார், சிவசேனா மாணவரணி தலைவர் தன்விக்அர்ஜுன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், மாவட்ட இளைஞரணி தலைவர் வெள்ளைப்பாண்டி, ஒன்றிய இளைஞரணி தலைவர் பாலசந்தர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: