அரியலூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

அரியலூர், ஆக. 27: அரியலூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் நகரில் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அரசு ஊழியர் பெண்ணிடம் 5 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வசித்து வருபவர் ராமலிங்கம் மனைவி புஷ்பலதா (45). இவர், அரியலூரில் உள்ள அரசு கூட்டுறவு மருந்தகத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் புஷ்பலதா தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மர்மநபர், பூஜை அறையில் இருந்த 1 கிராம் தங்கக்காசு மற்றும் ரூ.20,000 பணத்தை திருடிக்கொண்டு, தூங்கி கொண்டிருந்த புஷ்பலதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். புஷ்பலதா எழுவதற்குள் மர்மநபர் தப்பித்துள்ளார். இதுகுறித்து, புஷ்பலதா கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: