அசூர் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் ஏரியில் விழுந்து பலி

குன்னம், ஆக. 26: அசூர் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் ஏரியில் விழுந்து பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அசூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி கிளார்க் மகன் ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார் (21), தாண்டமுத்து மகன் சின்னு(என்கிற) மேகநாதன் (21) இருவரும் நேற்று மதியம் 2மணியளவில் மீன் பிடிப்பதற்காக அசூர் - ஆய்குடி இடையே உள்ள ஏரிக்கு சென்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மாலை 5 மணி அளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ரஞ்சித்குமார், மேகநாதன் 2 பேர் மீதும் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் மேகநாதன் படுகாயம் அடைந்தார். ரஞ்சித்குமார் மின்னல் தாக்கியதில் ஏரியில் மூழ்கி விட்டார். இதையடுத்து ரஞ்சித் குமாரை பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் ஐந்து மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஏரியில் இருந்து உயிரிழந்த ரஞ்சித் குமார் உடலை மீட்டனர். காயமடைந்த மேகநாதன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் குன்னம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: