×

போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது; ஜீப் பறிமுதல்

போடி, ஆக. 26:தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக கடத்தி செல்லப்படும் ரேஷன் அரிசியை தடுப்பதற்காக எல்லை பகுதியில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு, பறக்கும் படை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம், பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசிக்கு கேரளாவில் தனி மவுசு உண்டு. கேரள எல்லையில் ரேஷன் அரிசியை கேரள வியாபாரிகள் கிலோ ரூபாய் 15 முதல் 18 வரை விலைக்கு வாங்குகின்றனர். குறிப்பாக தமிழக எல்லை பகுதியான கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் தேனி, போடி பகுதிகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கேரள வியாபாரிகள் வீடு வீடாக சென்று, படி ஒன்று ரூ.10 ெகாடுத்து வாங்குகின்றனர். அதை 50 கிலோ சிப்பமாக மூட்டையாக மாற்றி அதை கேரளாவிற்கு ஜீப் மற்றும் லாரிகளில் கடத்தி செல்கின்றனர்.

கம்பம் மற்றும் குமுளி வழியாக நாள்தோறும் சுமார் 10 டன் முதல் 50 டன் வரை கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கேரள எல்லையான கம்பமெட்டு மற்றும் குமுளி வரை மட்டுமே ரேஷன் அரிசி கடத்தி சென்றால் போதுமானது. அங்கிருந்து எர்ணாகுளம், திருச்சூர், காலடி போன்ற இடங்களில் உள்ள அரிசி மில்களுக்கு கேரள அரிசி வியாபாரிகளால் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ரேஷன் அரிசி பாலீஸ் செய்து பட்டை தீட்டி, தரம் பிரிக்கப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டு தரமான இட்லி அரிசியாகவும் ,சாப்பாட்டு அரிசியாகவும் 5, 10 மற்றும் 25 கிலோ மூட்டையாக மாற்றி கிலோ ரூ.30 முதல் 40 வரை மறு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 வரை மட்டுமே அதிகளவில் கடத்தி செல்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக போடி முந்தல் சாலை வழியாக போடிமெட்டு, தேவாரம் சாக்குலத்துமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி போன்ற தமிழக, கேரளா எல்லைகளில் ஜீப், லாரி, குதிரை, கழுதை ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக வனத்துறை, காவல்துறை, வணிக வரித்துறை மூலம் எல்லை பகுதியில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டன. ஆனால் அதையும் தாண்டி கள்ளச்சந்தை வியாபாரிகள் ரேசன் அரிசியை தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக ஒழிக்க தனிப்படை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பறக்கும்படை துணை வட்டாட்சியர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் தாமரைச்செல்வம் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் போடி முந்தல் சாலை செக்போஸ்ட் அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில், ஜீப்பில் 2500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள், ஜீப்பை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தபோது, போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் வனத்துரை (37) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் போடி உணவு பாதுகாப்புக் கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags : Bodi ,Kerala ,Jeep ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்