×

பெருந்துறையில் இன்று அரசு விழா ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு, ஆக. 26:  ஈரோட்டில் இன்று (26ம் தேதி) 2வது நாள் நிகழ்ச்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருந்துறையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையொட்டி, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் விழா மேடை அமைந்துள்ள பகுதியிலும், வழிநெடுகவும் 3,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் ஈரோடு மாவட்டம் கோபி டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் முழு உருவச்சிலையை திறந்து வைத்து, சாலை மார்க்கமாக அத்தாணி, ஆப்பக்கூடல், பவானி, பி.பெ.அக்ரஹாரம் வழியாக ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்து, நேற்று இரவு ஓய்வெடுத்தார்.

தமிழக முதல்வரின் 2வது நாள் நிகழ்ச்சியாக இன்று (26ம் தேதி) காலை ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, பெருந்துறை அருகே உள்ள கிரே நகரில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பின்னர், பெருந்துறை சரளை பகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.இதையொட்டி, அரசு நிகழ்ச்சி நடக்கும் பெருந்துறை சரளையில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில், ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, எஸ்பிக்கள், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 1,800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதேபோல, முதல்வர் ஆய்வு செய்யும் கிரே நகரில் 100 போலீசாரும், முதல்வர் வரும்  வழித்தடங்களில் 1,100 போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முன்னெச்சரிக்கையாக காலிங்கயராயன் விருந்தினர் மாளிகையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதுதவிர மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஆகியோர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : ADGP ,Thamaraikannan ,Perundurai ,
× RELATED பட்டதாரிகளுக்கு வாய்ப்பு 4,889 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல்