×

பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு போட்டி

நாமக்கல், ஆக.26: நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், 8 வட்டங்களில் கால்பந்து, கையுந்து பந்து, கபடி, ஆக்கி, கூடைப்பந்து, மேஜைப்பந்து, எறிபந்து, கைப்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து, கோ-கோ, மென்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி  மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடமும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினர் இரண்டாமிடமும் பிடித்தனர். அதேபோல், கூடைப்பந்து போட்டியில் ரெட்டிப்பட்டி பாரதி வித்யாலயா, நகரவை உயர்நிலை பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இதில் பாரதி வித்யாலயா பள்ளி முதலிடமும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன. பூப்பந்து போட்டியில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஸ்பெக்ட்ரம் அகாடமி, நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளிகள் அணிகள் விளையாடியது. இதில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், அலங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. போட்டிக்களை உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புசெழியன் ஆகியோர் நடத்தினர்.

Tags : Bharathiar Day ,Republic Day Sports Competition ,
× RELATED எளம்பலூரில் மாவட்ட அளவிலான...