ஸ்ரீபெரும்புதூரில் நூதன முறையில் ஊராட்சி தலைவரிடம் பணம் பறிப்பு ஒருவன் கைது; மற்றொருவன் தலைமறைவு

 ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூரில் நூதன முறையில் உளவுத்துறை போலீஸ் என கூறி முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவரிடம் ரூ.7 லட்சத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவனை தேடி வருகின்றனர். சென்னை, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (38). இவரும், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சபரீஷ் (37) ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டு, நான் உளவுத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன். நீங்கள் செங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாக உங்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளான். மேலும், உங்கள் மீது வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால், எனக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என சம்பத்குமார் மிரட்டி உள்ளார். இதனால், பயந்துபோன சம்பத் ரூ.7 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர், தண்டலம் பகுதிக்கு வரவழைத்து ரூ.7 லட்சம் பணத்தை தாமோதரன் மற்றும் சபரீஷ் ஆகிய இருவரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் மீது சந்தேகமடைந்த சம்பத்குமார் ஸ்ரீ பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில்,  ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் தாமோதரனின் செல்போன் எண்னை ஆய்வு செய்து பூந்தமல்லி அருகே தலைமறைவாக இருந்த தாமோதரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், தாமோதரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் ரூ.7 லட்சம் பணத்தில் ரூ.6.90 பணத்தை ஓட்டல், மது மற்றும் பெண்களுடன் உல்லாசமாக செலவிட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து மீதம் இருந்த 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சபரீசனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: