×

 மூன்று போக சாகுபடிக்கு வாய்ப்பு திருவாரூர் மாவட்டத்தில் 61,588 ஹெக்டேர் குறுவை தொடர்ந்து 1,654 ஹெக்டேரில் சம்பா சாகுபடி

திருவாரூர்,ஆக. 26: திருவாரூர் மாவட்டத்தில் 61 ஆயிரத்து 588 ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில் இதுவரையில் ஆயிரத்து 654 ஹெக்டேரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலரும் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். பின்னர் இறுதியாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பேசியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 60 ஆயிரம் ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9 ஆயிரத்து 500 ஹெக்டேரிலும் என மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் குறுவை பருவத்தில் 14 ஆயிரத்து 204 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 38 ஆயிரத்து 63 ஹெக்டேரில் செம்மைநெல் சாகுபடிமுறையிலும், 9 ஆயிரத்து 321 ஹெக்டரில் சாதாரணநெல் நடவுமுறையிலும் என மொத்தம் 61 ஆயிரத்து 588 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் ஆயிரத்து 582 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்புமுறையிலும், 38 ஹெக்டேரில் செம்மைநெல் சாகுபடி முறையிலும், 34 ஹெக்டேரில் சாதாரணநெல் நடவுமுறையிலும் என மொத்தம் ஆயிரத்து 654 ஹெக்டேரில் சம்பாசாகுபடிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது, 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது, விவசாய குடும்பத்துக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத்தொகைகள் வரப்பெற்றுள்ளன. தற்போது 12வது தவணைத் தொகைபெறுவதற்கு, விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே இந்த திட்டத்திற்கான பயனாளிகளின் நிலஆவணங்கள் தமிழ்நிலம் என்ற இணையதளத்தில் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் தங்களுடைய நிலஆவணங்களை (பட்டா), அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலைஉதவி இயக்குநர் அலுவலகத்திலும், வேளாண் விற்பனைத்துறை அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் காண்பித்து, சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதிவிடுவிப்பு நடைபெறுவதால், தகுதியான விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ சிதம்பரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வேளாண்மை இணை இயக்குநர் ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tiruvarur district ,Kuru ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...