×

குற்றவாளிகளை கண்டுபிடிக்க செக்போஸ்ட், வட்டாணம் ரோட்டில் கண்காணிப்பு காமிரா தொண்டி பொதுமக்கள் வலியுறுத்தல்

தொண்டி,ஆக.24: தொண்டியில் செக்போஸ்ட் மற்றும் வட்டாணம் ரோட்டில் சிசிடிவி காமிரா இல்லாததால் விபத்து மற்றும் திருட்டு குறித்து அறிய முடியாமல் போலீசார் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சுலபமாக தப்பி வருகின்றனர். பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் மும்முனை சந்திப்பாக உள்ளது செக்போஸ்ட் பகுதி. மேலும் தொண்டி நகரின் மையப் பகுதியாகவும் உள்ளது.

 பரபரப்பு மிகுந்த இந்த ரோடு எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி முதல் நம்புதாளை வரையிலும் நடக்கும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடக்கும் விபத்தும் திருட்டு சம்பவங்களும் இந்த ரோட்டை கடந்தே செல்ல வேண்டும். எங்குமே காமிரா இல்லாததால் அவ்வாறு குற்ற சம்பவம் நடக்கும் போது எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசார் சிரமப்படுகின்றனர். தொண்டி பகுதியில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் சுலபமாக தப்பி விடுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இங்கு சிசிடிவி காமிரா பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதன் பிறகு அது பாதியில் நிறுத்தப்பட்டது.

இதேபோல் தொண்டியின் மறு பகுதியான வட்டாணம் ரோடு பட்டுக்கோட்டை -தொண்டி சந்திக்கும் மும்முனை சந்திப்பாக உள்ளது. புது பஸ் ஸ்டாண்டிலிருந்து அனைத்து வாகனமும் இவ்வழியாகத்தான் செல்ல வேண்டும். கிராம புற மக்களின் பிரதான சாலையாகவும் உள்ளது. கொடி பங்கு, வேலா வயல், வட்டானம் உள்ளிட்ட பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிர் பலி ஏற்படும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதில் குற்றவாளிகள் யார் என கண்டுபிடிப்பதில் போலீசார் கடும் சிரமம் அடைகின்றனர். அதனால் செக்போஸ்ட் மற்றும் வட்டாண்டி ரோடு இப்பகுதியில் சிசிடிவி காமிரா பொருத்துவதால் பல்வேறு வகையில் பயன் அளிக்கும். அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆனந்தன் கூறியது, தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். கிழக்கு கடற்கரை சாலையில் வழிப்பறி கொள்ளை, இரவு நேரங்களில் திருட்டு, வாகனங்களில் விபத்து ஏற்படுத்தி விட்டு இந்த வழியாகத்தான் தப்பி செல்ல வேண்டும் .அதனால் செக்போஸ்ட் பகுதியில் காமிரா அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சாதிக் பாட்சா கூறியது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செக்போஸ்ட், அரசு ஆஸ்பத்திரி, வட்டாணம் ரோடு உள்ளிட்ட பகுதியில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டது. சில காலம் காட்சி பொருளாக இருந்தது. பின்னர் அதுவும் கழட்டப்பட்டது. குற்றச்சம்பவங்கள் ஏற்பட்டால் மட்டுமே இதன் அருமை தெரிகிறது. ஒவ்வொரு கடையாக போலீசார் சிசிடிவி காட்சிகளை காண அழைகின்றனர். இது இரு தரப்பிற்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

பல்வேறு இடங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்கள் டூவீலர் மற்றும் கார்களில் தப்பி விடுகின்றனர். இவர்களை இப்பகுதி செக்போஸ்டை கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் அவர்களை கண்டு பிடிக்க காமிரா பொருத்தினால் மட்டுமே முடியும். தற்போது பல தெருக்கள், வீடுகளில் காமிரா பொருத்தப்படுவதால், குற்றவாளிகள் எளிதில் அடையாளம் காணப்படுகின்றனர். இது போலீசாருக்கும் உதவியாக இருக்கும் என்பதால், செக்போஸ்ட் பகுதியில் காமிரா பொருத்துவது அவசியமாகும். மக்களின் நலன் கருதி போலீசார் உடனே காமிரா பொருத்த வேண்டும். மேலும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு ரோந்து பணியை அதிகபடுத்த வேண்டும். பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் அவர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்க முடியும். இதுபோல் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் தப்பி விடுகின்றன. காமிரா பொருத்தி இருந்தால், விபத்து நடந்த நேரத்தை வைத்து அந்த வாகனங்களை கண்டு பிடிக்க முடியும் என்றனர்.

Tags : Checkpost ,Wattanam Road ,
× RELATED மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை