×

திண்டுக்கல்லில் நம்ம ஊரு சூப்பரு திட்ட துாய்மைப்பணி மாவட்ட கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் ஆக 24: ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட துாய்மைப்பணிகளை மாவட்ட கலெக்டர் விசாகன் பார்வையிட்டார். ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீவல்சரகு, போடிகாமன்வாடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கலெக்டர் விசாகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு தெரிவித்ததாவது, ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 306 கிராம ஊராட்சிகளிலும் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார மற்றும் நீர் மேலாண்மையை வலியுறுத்தும் சிறப்பு விழிப்புணர் பிரச்சாரம் கடந்த 20ம் தேதி முதல் செப்.2ம் தேதி வரை நடைபெறுகிறது.

அனைத்து அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டார வள மையம், கிராம நிர்வாக அலுவலகம், கிராமப்புற நுாலகம், பொது விநியோ கடை உள்ளிட்ட 2,536 அரசு அலுவலக கட்டிடங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளது. 306 கிராமம் ஊராட்சிகளில் உள்ள 3,084 குக்கிராமங்களில் 2530 இடங்கள் அதிகமாக குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் இடங்கள் கண்டறியப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும் 228 வரத்து வாய்க்கால் பகுதிகள், 536 நீர் நிலைப் பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர்தேக்க தொட்டி, இதர நீர் ஆதாரங்கள் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யும் பணிகள் ஆக 23ம் தேதியும், கழிவுநீர் வாய்க்கால் நிறைவுறும் பகுதி துாய்மைப்படுத்தும் பணிகள் ஆக 24ம் தேதியும், இதர அரசு அலுவலக கட்டிடங்கள் துாய்மைப் படுத்தும் பணிகள் ஆக 25, 26ம் தேதி ஆகிய இரண்டு தினங்களிலும் நடைபெறவுள்ளது.

மேலும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு தடை செய்தல் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் பைகள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், விழிப்புணர்வு நிகழ்வுகள் செப் 17ம் தேதி முதல் செப் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நம்ம ஊரு சூப்பரு சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தால் சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது’’ என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், ஊராட்சி உதவி இயக்குநர் ரெங்கராஜன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், கிராம ஊராட்சித் தலைவர்கள் நாகலட்சுமி, ராணி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dindigulli ,Namma Uru ,Super Project Sanitation District Collector ,
× RELATED எனது கிராமம் திட்டத்தின் மூலம்...