அந்தமானுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் ஊட்டி மலை காய்கறிகள்

ஊட்டி, ஆக.24: நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முட்டைகோஸ், கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகள் அந்தமான் தீவுகளுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை மற்றும் மலை காய்கறிகள் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மலை காய்கறி பயிர்கள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதில், அதிகபட்சமாக 2800 ஹெக்டர் பரப்பளவில் கேரட்டும், 1400 ெஹக்டர் பரப்பளவில் உருளைகிழங்கும் பயிரிடப்படுகிறது.

இதுதவிர, பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர், முட்டைகோஸ், பூண்டு உள்ளிட்ட மற்ற காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. நீலகிரியில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்நிலையில், நீலகிரியில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்படும் கேரட், விளைவிக்கப்படும் பகுதிகளிலேயே நன்கு கழுவி தூய்மைபடுத்தப்பட்டு தரம் பிரித்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நல்ல விளைச்சல் உள்ள சமயங்களில் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு நாள்ேதாறும் சுமார் 70 முதல் 100 டன் வரையிலான ேகரட் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதர காய்கறிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அந்தமான் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. குறைந்த அளவில் அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது சமீபகாலமாக அதிகளவில் கப்பல்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தமான் தீவுகளுக்கு கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் 3 முதல் 5 டன் வரை லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து கப்பல் மூலம் அந்தமான் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலமாகவும் வருவாய் கிடைத்து வருகிறது. இதுகுறித்து காய்கறிகள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஹரி கூறுகையில்,``நீலகிரியில் விளைவிக்கப்படும் காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவை தரமாகவும், நல்ல சுவையாகவும் உள்ளது.

இதனால், தென்னிந்திய நகரங்களுக்கு மட்டுமின்றி அந்தமான் தீவுகளுக்கும், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாங்கள் இங்கிருந்து தரமான கேரட் உள்ளிட்டவற்றை வாங்கி லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி விடுகிறோம். அங்கிருந்து குளிர்சாதன வசதியுள்ள கன்டெய்னர் மூலம் அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கடைகளில் விற்கப்படுகின்றன’’ என்றார்.

Related Stories: